மங்களூர்: தாலிபானை காப்பியடிப்பதா இந்துக் கலாச்சாரம்?
மங்களூர்: தாலிபானை காப்பியடிப்பதா இந்துக் கலாச்சாரம்?
நா.மகேந்திரன்
மங்களூரில் நடந்த நிகழ்சிகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை. அங்கு உள்ள கேளிக்கை விடுதியில் கடந்த சனிக்கிழமை அத்துமீறி நுழைந்த ஸ்ரீராம சேனா அமைப்பைச் சேர்ந்த சிலர், அங்கு மது அருந்தி நடனமாடிக் கொண்டிருந்த ஆண்கள், இளம் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது டிவி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப் பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக ‘ஸ்ரீராம சேனா’ அமைப்பின் தலைவர் உட்பட 17 பேரைக் கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதைக் கர்நாடகா மற்றும் தேசிய பாரதீய ஜனதா கட்சி, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் பல இந்து அமைப்புகளும், திரு.அத்வானி போன்ற பெருந்தலைவர்களும் கண்டித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்து ஸ்ரீராம சேனா தலைவர்கள், அங்கிருந்த பெண்கள் இந்திய கலாச்சாரத்துக்கு புறம்பாக நடந்துகொண்டதால் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.
அட, இதுதான் இந்திய கலாச்சாரமா தோழர்களே? இந்தியக் கலாச்சாரம் என்றால் என்ன? அதன் பிரதிபலிப்பாகப் பெண்கள் மட்டும்தான் இருக்க வேண்டுமா? ‘பப்’ போன்ற இடங்களில் பெண்கள் செல்வது இந்திய கலாச்சாரத்துக்கு இழுக்கு என்றால் அங்கு ஆண்கள் செல்வது…
இதுவரை எத்தனை ஆண்களை இதற்காக நீங்கள் தாக்கியுள்ளீர்கள்? அதற்கு தைரியமிருக்கிறதா? ஆண்களிடம் காட்டமுடியாத உங்களது வீரத்தைப் பெண்களிடம் காட்டியுள்ளீர்களா?
இந்தியக் கலாச்சாரத்துக்கு இது புறம்பானது என்றால் அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யுங்கள். எது இந்தியக் கலாச்சாரம் என்பதைப் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அதைச் செய்யாமல் தாலிபான் பாணியில் பெண்களை அடித்து உதைப்பதும், உங்களை கலாச்சாரக் காவலர்களாகக் கற்பனை செய்துகொள்வதும் மூடத்தனமில்லையா?
அடுத்ததாக, இந்த கலாச்சாரத் தூய்மையின் முடிவுதான் என்ன? அரைகுறை ஆடையணிகிறார்கள் என்று இன்னொரு பேட்டியில் ஒரு ஸ்ரீராம சேனா தலைவர் பேட்டியளித்துள்ளார். இப்படித்தான் தாலிபானும் துவங்கியது.
முதலில் அரைகுறை ஆடை என்பார்கள்; அடுத்தது மேலைநாட்டு ஆடைகளை அணிவது தவறு என்பார்கள்; அடுத்தது முட்டாக்குப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பார்கள்; அடுத்தது ஆண்கள் பணிபுரியும் இடங்களில் பெண்கள் பணிபுரியக் கூடாது என்பார்கள்; மருத்துவர்களாக, தாதிகளாக பெண்கள் பணிபுரியக்கூடாது ஏனெனில் அங்கே ஆண்களின் கையைத் தொட வேண்டியிருக்கிறது என்பார்கள், அடுத்ததாக கல்விச்சாலைகளில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கக் கூடாது அது கலாச்சாரத்துக்கு இழுக்கு என்பார்கள், அடுத்தது கல்வி நிலையங்களுக்கே செல்லக்கூடாது அது பெண்களின் ஒழுக்கத்தைக் குலைத்துவிடும் என்பார்கள்.
மேலே சொன்னதெல்லாம் கற்பனையல்ல. தாலிபான் பரவும் பிரதேசங்களில் எல்லாம் இத் நிகழ்ந்துள்ளது! இப்போதுகூட பாகிஸ்தானில் தாலிபான் பரவியுள்ள இடங்களில் பெண்களின் கல்விக்கூடங்களைத் தாலிபான் எரித்து வருகிறது. இதுவரை 180க்கும் அதிகமான பெண்கள் பள்ளிகளை அவர்கள் எரித்துள்ளனர். காரணம்? “அது கலாச்சாரத்துக்கு எதிரானது”! ஆஃப்கானிஸ்தானில் கூடக் கல்விச்சாலைகளுக்குச் செல்லும் பெண்கள் மீது ஆசிட் எறிகின்றனர் தாலிபான்கள்.
இந்த நிலைக்கா நமது இந்து சமுதாயம் செல்ல வேண்டும்? மங்களூர் தாக்குதல் போன்றவை தொடர்ந்து நிகழ்ந்தால் இது போன்ற இருண்ட நிலைக்கே நமது சமுதாயத்தை இது இழுத்துச் சென்றுவிடும். கற்பு, கலாச்சாரம், தூய்மை ஆகியவை வெளி நிர்ப்பந்தத்தின் மூலம் வருவன அல்ல, தானாகவே சுய தேர்வின் மூலம் வருவன. இதுவே இந்து சமுதாயத்தின் தத்துவம், இதனாலேயே இந்து சமுதாயம் உலகின் உன்னத சமுதாயமகத் திகழ்ந்தது. அந்நியப் படையெடுப்புகளினால் தான் இந்தியப் பெண்கள் முக்காடு போட ஆரம்பித்தனர், அவர்களின் நிலை தாழ்ந்தது. பெண்களுக்கு ஆத்மா இருக்கிறது என்பதைக்கூட ஆபிரகாமியங்கள் ஒப்புக்கொள்ளாத காலத்திலேயே நம்மிடையே அவ்வையார்களும், ஆண்டாள்களும் தோன்றி ஆன்மீகத்தை போதித்தனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
கற்பு என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்றான் யுகக்கவி பாரதி. கற்பு தவறும் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்பது ஆபிரகாமியக் கருத்தியலே. இந்த ஆபிரகாமியக் கருத்தியலுக்கு இந்து அமைப்புகள், இந்து இளைஞர்கள் பலியாகிவிடக் கூடாது.
கலாச்சாரம் நிர்ப்பந்தத்தால் வருவது அல்ல, சுய தேர்வின் மூலமும் சமூக மேம்பாட்டின் மூலமும் வருவது. அதே போன்று சில இளைஞர்கள் தாமாகவே இதுதான் இந்து கலாச்சாரம் என்று முடிவு செய்து வன்முறையில் ஈடுபடுவது நமது நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் மிகவும் கேடு விளைவிக்கும்.
நன்றி: தமிழ் இந்து வலைத்தளம்